அலையாய் வீசும் | Love and Life Quotes in Tamil-04
391.தொடுக்கின்றாய் அழகாய்
தொடுத்திரையில்
வார்த்தைகளை
தொற்றி கொல்(ள்)கிறது
நாணமும்
நீ தொடாமலேயே
392.எழுத்தில் இருக்கும்
என்னையும்
மனதில் இருக்கும்
உன்னையும்
வெளிப்படுத்தவே முடியாமல்
நமக்கான சந்திப்பு
என்பது
பெரும்பாலும்
மௌனத்திலேயே விடைபெறுகிறது
393.அலையாய் வீசும்
உன்னன்பில்
மிதக்கின்றேன்
காகித கப்பலாய்
சந்தோஷ கடலில்
394.மன கிளையில்
படர்கிறாய்
கொடியாக
உள்ளமும் அசைந்தாடுது
ஊஞ்சலாய்
395.சொப்பனம் காண
பிடிக்கவில்லை
நீ சொற்ப
நேரத்தில்
கலைந்திடுவதால்
கற்பனையோடு
காத்திருக்கிறேன்
நித்திரை தொலைத்து
உன் முகம்
காண
396.நானும் கூட
கவிதை எழுதுகிறேன்
உனக்காக அல்ல
உன்னால்
397.காண துடிப்பது
விழி உனையென்றால்
காலமெல்லாம் காத்திருப்பேன்
398.நீ பேசும்
மொழியிடம்
ஜெயித்து விட்டாலும்
உன் பேசா
மொழியிடம்
தோற்றுத்தான்
போகிறேன் நானும்
399.நிலவோடு
போட்டியிடுகிறது
மனம்
சலிக்காமல்
காத்திருப்பதில்
உனக்காக
400.உன் பார்வையிலிருந்து
மறைந்து கொண்டாலும்
காட்டி கொடுக்கிறது
நாணம் நானும்
உன் நினைவில்
மூழ்கி கொண்டிருப்பதை
401.நிலையான மனம்தான்
இன்று நிலைக்கொள்ளாது
தடுமாறுகிறது
உன்னில் சுழன்று
402.சத்தமின்றி இதயத்தை
துளைக்கும்
உன் மௌனத்தை
விடவா
ஒரு கூர்மையான
ஆயுதம் இவ்வுலகில்
இருக்கப்போகிறது
நித்தமும் எனக்காகவே
காத்திருக்கும் ஒற்றை
பேரழகி அவள்
403.ஆசையாய்
அலங்கரித்து கொண்டாலும்
நீ ரசிப்பதை
காணும் தைரியம்
இன்னுமென்
விழிகளுக்கு இல்லை
404.பக்கம் பக்கமாய்
வர்ணிக்கின்றான்
உன் வெட்கமும்
அழகிய கவிதைத்தான்
என்று
405.தூரத்தில் நீயிருந்தால்
துயரத்தில் துடிக்குது
மனம்
406.கடவுளையும்
மிஞ்சி விடுகிறாய்
காத்திருக்க வைத்து
காட்சி தராமலேயே
கடத்துவதில்
407.வானத்தில் மட்டுமின்றி
எந்தன் கவியிலும்
நித்தமும் ஒளி
வீசும்
ஒற்றை பேரழகி
அவள்
408.உனக்கென்ன நிமிடத்தில்
வந்துவிடுவேன்
என்கின்றாய்
எனக்கல்லவோ
நகர்கிறது
யுகமாய் நொடியும்
409.எண்ணற்ற நட்சத்திரங்கள்
இருந்தும்
உன்னிடமே மயங்குகிறேன்
மாயம் செய்ததென்னவோ
410.உன்
துடிக்கும் இதயமும்
தவிக்கும் நினைப்பும்
எனக்காகவே
இருக்க வேண்டும்
411.யாரோடும்
பயணிக்க பிடிக்கவில்லை
நம் நினைவோடு
பயணிக்க பிடித்திருப்பதால்
412.இரக்கமற்ற
இரவு நீள்கிறது
நீயில்லா நாட்களில்
என் உறக்கத்தையும்
பறித்து
413.இதயங்கள்
தனித்தனி என்றாலும்
உன் சுவாசம்
தீண்டவில்லையெனின்
என் மூச்சும்
இல்லை
414.வெள்ளை காகிதத்தில்
வெறுமையாய்
கிறுக்கி கொண்டிருந்த
எனையும் ரசனையாய்
எழுத வைத்தது
நீ
என்மீது கொண்ட
காதல்
415.இமைகள் கொண்டு
சிறை பிடித்து
விட்டேன் உனை
கனவு கலைந்தாலும்
நீ கண்களிலிருந்து
தப்பிவிடாதிருக்க
416.எட்டிப்போக
எத்தனித்தாலும்
எனை கட்டிப்போடுகிறது
உன் கரங்களின்பிடி
417.துளையில்லா
மூங்கில் மரங்களிலும்
புல்லாங்குழலின் இசை
உன் நினைவுகள்
தீண்ட
418.ஒருவரில் ஒருவர்
நாம் தொலைந்த
இந்நிமிடங்கள்
தொடர்ந்திட வேண்டும்
தொலையாமல்
419.சொல்லாத காதலாய்
மனம் கொல்லாமல்
கொல்லுது
நீ இல்லாத
போது
ஏதேதோ
சொல்ல நினைத்து
உன்னிடம்
420.சத்தமின்றி நடந்தாலும்
நித்தம் இம்சிக்கின்றதே
மாட்டி சென்றாயா
மனதை கொலுசில்
உனையே நினைத்திருக்க